நாம் இந்த உலகத்திற்கு வந்து சேருவதற்கு முன்னாலே ஒரு இடத்திலே கொஞ்ச நாள் தங்கி இருந்தோமே அந்த இடம் ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு? அதுதான் கருப்பை. பத்து மாதம் அங்கே இருந்துதான் வந்திருக்கிறோம். இருந்தாலும் அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி யாருக்காவது நினைவு இருக்கிறதா? நிச்சயமாக இருக்காது. இதுநாள் வரைக்கும் கருப்பைக்குள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி யூகமாகத்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
இப்போது கேளா ஒலி வரைவுகள் மூலம் அங்கே நடப்பதையெல்லாம் விவரமாகப் புரிந்துகொள்ள முடியும். கருப்பைக்குள்ளே இருக்கும் குழந்தை கொட்டாவி விடுவது, விரல்களை சப்புவது, கைக்கு எட்டுவதை பிடிப்பது, சோம்பல் முறித்தல், கொட்ட கொட்ட விழிப்பது, முகத்தைக் கோணிப்பது இவையெல்லாம் ஒரு ரெலிவிஷன் திரையிலே பார்க்க முடியும்.
அந்த அளவுக்கு மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. கருப்பைக்குள்ளே சிசு ஒரு திரவத்துக்குள்ளே மிதந்து கொண்டிருக்கும். கண் விழித்ததும் அது கொட்டாவி விட்டுக்கொண்டே கை கால்களை உதைத்தல், கைகளை நீட்டி தொப்புள் கொடியை பிடித்தல், அதோடு கொஞ்ச நேரம் விளையாடுதல். அதன்பின் கைக்கட்டை விரலை வாயிலே வைத்துக் கொள்கிறது.
தாயின் இதயத்துடிப்பு, செரிமானப் பாதையிலே ஏற்படும் சத்தங்கள் இதையெல்லாம் கேட்டுக்கொண்டே தாயின் குரல் கேட்பதை உணர்ந்து அதை கவனிக்கிறது. தாய் எழுந்து நடக்கும் போது கருப்பை நீரின் லேசான குலுக்கலிலே மெய்மறந்து மறுபடியும் தூங்கிப் போகிறது. கருப்பைக்குள்ளே மிகவும் அமைதியாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். ஒரு மைக் மூலமாக அங்கே உள்ள சத்தத்தை எல்லாம் பதிவு செய்திருக்கிறார்கள்.
தாயின் இதயத்துடிப்பு அங்கே டம்-டம் என்று கேட்டுக்கொண்டே இருக்கும். தாய் மூச்சு விடுவதும் கேட்டுக்கொண்டே இருக்கும். வயிற்றிலிருந்தும் குடலிலிருந்தும் வரும் பலவிதமான சத்தங்கள், இதைத்தவிர வெளி உலகத்திலே உள்ள சத்தமும் உள்ளே கேட்கிறதாம். அதனாலேதான் கருவுற்ற தாய்மார்கள் இருக்கும் அறையிலே ரேடியோவும் ரி.வியும் அலரும் அளவுக்கு வைக்கக்கூடாது என்று சொல்லுவது உண்டு. சத்தம் போட்டுப் பேசுவதும் தவறு. சண்டை போடுவதும் தவறு. சத்தமான இடங்களிலிலே அவர்கள் இருக்கக் கூடாது. ஒரு சிசு கருப்பையிலே இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட தாலாட்டுப் பாட்டை பாடிக்கொண்டே இருந்தால் அது அந்தப் பாட்டுக்கு ஏற்றபடி கை கால்களை ஒரு குறிப்பிட்ட வகையிலே ஆட்டக் கற்றுக்கொள்ளுமாம்.
குழந்தை பிறந்த பிறகு அதே பாட்டைப்பாடி அழுகின்ற குழந்தையை அமைதிப்படுத்தி விடலாம். இதுவரைக்கும் சொல்லியது மருத்துவர்கள் சொன்னவற்றைத்தான். இப்போது சொல்வது நான் சொல்வது. அதாவது தாலாட்டு யார் பாடுவது? குழந்தை வயிற்றிலே இருக்கும் போது தாய் தாலாட்டுப் பாடுவதுதான் நல்லது. அப்போதுதான் அது சுகமாக காலை ஆட்டும்.
அப்பாக்கள் தாலாட்டுப் பாடினால் என்ன ஆகும் தெரியுமா? வயிற்றில் இருக்கும் போதே குழந்தை ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடும். வெளியே வந்த பிறகு காலாட்டுவதற்குப் பதிலாக உதைக்க ஆரம்பித்துவிடும். ஒரு வீட்டில் தொட்டிலிலே ஒரு குழந்தை சத்தம் போட்டு அழுதுகொண்டிருந்தது. அப்பா தொட்டிலை ஆட்டிக்கொண்டிருந்தார். வெளியே போயிருந்த அம்மா திரும்பி வந்தார். சும்மா தொட்டிலை ஆட்டாதீர்கள். குழந்தை எப்படித் தூங்கும் ஒரு தாலாட்டுப் பாடக்கூடாதா என்றார்.
அது முடியாது என்றார் அப்பா. ஏன் என்றார் அம்மா? நான் தாலாட்டுப் பாட ஆரம்பித்த பிறகுதானே தூங்கிக்கொண்டிருந்த குழந்தை இப்படி அழவே ஆரம்பித்தது என்றார் அப்பா.
