
ஒரு அரசன் ஒரு நாள் வேட்டைக்கு சென்றான். அப்படிச் செல்லும் வழியில் ஒரு இடத்திலே தங்கினார். அது ஒரு சின்ன கிராமம். அரண்மனையிலிருந்து எடுத்து கொண்டு வந்திருந்த உணவை பரிமாறினார்கள். உணவை அரசன் உண்ண ஆரம்பித்தார்.
அப்பொழுதுதான் ஒரு விடயம் தெரிய ஆரம்பித்தது. உணவிலே உப்பு போதவில்லை. சிறிது குறைவாகத் தெரிந்தது. உடனே அரசன் ஒரு சேவகனைக் கூப்பிட்டார். குதிரையிலே ஏறி நேராக அரண்மனைக்குப் போ! அங்கே போய் சிறிது உப்பு கொண்டு வா உணவில் போட்டு சாப்பிடுவதற்கு என்றார்.
பக்கத்திலே நின்று கொண்டிருந்த அமைச்சர் இதைக் கவனித்தார். உடனே மெதுவாகக் குனிந்து அரசனிடம் ஒரு யோசனை கூறினார். அரசே! சிறியளவு உப்பிற்காக இங்கேயிருந்து இவ்வளவு தூரத்திற்குப் போக வேண்டுமா? இப்பொழுது நாம் தங்கியுள்ள இந்த கிராமமும் நமது ஆட்சிக்கு உட்பட்டது தானே! இங்கேயே ஏதாவது ஒரு வீட்டிலே சிறிதளவு உப்பு வாங்கிக் கொள்ளலாமே!
அரசனுக்கு உப்பு தேவை என்றால் போதாதா? உப்பு மூட்டை மூட்டையாக வந்து குவிந்துவிடாதா? இந்தச் சிறிய விடயத்துக்காக ஒரு சேவகனை அரண்மனை வரைக்கும் அனுப்ப வேண்டுமா? அப்படி என்றார் அமைச்சர். அரசன் நிமிர்ந்து பார்த்தார். அமைச்சரே நீங்கள் சொல்வது போல இங்கேயே வாங்கிக்கொள்ளலாம் தான்! உணவிற்காக நான் இங்கே சிறிய அளவு உப்பு வாங்கினேன் என்று தெரிந்தால் போதும் நமது ஊழியர்கள் இந்த ஊரையே வாங்கிவிடுவார்கள் என்றார் அரசர். பார்த்தீர்களா! இதில் இருந்து என்ன தெரிகின்றது?
ஒரு அரசனாக இருக்கின்றவர் அல்லது ஒரு கூட்டத்துக்குத் தலைவனாக இருக்கின்றவர் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கவேண்டியிருக்கின்றது என்பது தெரிகின்றது. அவர் ஒரு சிறிய தவறு செய்தாலும் அதையே ஒரு ஆதாரமாக வைத்து கொண்டு அவருக்கு கீழே இருக்கின்றவர்கள் ஏகப்பட்ட தவறு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஒரு அரசனுக்கு இருக்க வேண்டிய தகுதியிலேயே இது மிகவும் முக்கியம். அடுத்தபடியாக இருக்க வேண்டிய தகுதி வாக்குத் தவறாமை. சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும்.சொல்கின்றது ஒன்று செய்கின்றது ஒன்றாக இருக்க கூடாது. அதுக்கும் ஒரு கதை உண்டு.
ஒரு அரசன். அவருக்கு ஒரு நண்பன் இருந்தான். அந்த நண்பன் அரசனைக் காண வந்தான். அரசே என்னுடைய பிள்ளைகளுக்கு தின்பண்டம் வாங்க வேண்டும் ஒரு ரூபாய் இருந்தால் கொடுங்கள்! என்றார். சரி நீ கேட்டபடி உனக்குப் பணம் தருகின்றேன் ஆனால் அதற்கு முதல் நாம் இருவரும் ஒரு வில்வித்தை போட்டியைப் பார்த்துவிட்டு வருவோம் வா! என்று கூப்பிட்டார். சரி என்று இவரும் புறப்பட்டார்கள். இருவரும் புறப்பட்டு போட்டி நடைபெறுகின்ற இடத்துக்கு சென்றனர். அங்கே பெரிய பெரிய ஆட்கள் எல்லோரும் அம்பு விட்டுக் கொண்டு இருந்தார்கள். ஆனால் எந்தவொரு அம்புமே சரியான இடத்துக்குப் போகவில்லை. எல்லாம் குறி தவறிப் போய்கொண்டு இருந்தது. அரசன் பார்த்தார் அவருக்கு கோவம் வந்துவிட்டது.
என்ன இது? ஒருவருக்கும் சரியாக அம்பு விடத் தெரியவில்லை! என்று சொல்லி கொண்டே ஒரு அம்பையும் வில்லையும் வாங்கினார். தன்னோடு வந்திருந்த நண்பனிடம் அதை கொடுத்தார். நீ இந்த அம்பை விடு பார்க்கலாம் என்றார். அவர் அம்பை எய்தார் குறி தவறாமல் அந்தப் புள்ளியிலே விழுந்தது. அரசருக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உடனே நூறு ரூபாயை எடுத்து அவருக்கு அன்பளிப்பாக கொடுத்தார்.
அதன்பின் போட்டியெல்லாம் முடிந்தபின் அரசனும் நண்பனும் அரண்மனைக்குச் சென்றனர். அங்கே வந்ததும் அரசே கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டீர்களே! என்றான். என்ன வாக்குறுதி? என்றான் அரசன். ஒரு ரூபாய் தருவதாகக் கூறினீர்களே! என்றான்.அதுதான் நூறு ரூபாய் கொடுத்தேனே என்றார் அரசன். அப்பொழுது அந்த நண்பன் அரசனைப் பார்த்து சொன்னான். கொடுப்பதாக வாக்களிக்காத நூறு ரூபாய் கொடுக்கின்றாதாகக் கூறிய ஒரு ரூபாய்க்கு ஈடாகாது. அரசனாக இருக் கின்றவர் சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும். அதுதான் முறை என்றார். அரசனாக இருக்கின்றவர் எப்படி இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகின்றது. அரசனிடம் வேலை செய்பவர்களும் மக்களைக் கஷ்டப் படுத்தாதவர்களாக இருக்கவேண்டும்.
ஒரு அரண்மனையில் விருந்து நடந்து கொண்டு இருந்தது. அந்த ஊர்ப் பழக்கமாக ஓர் எலுமிச்சை பழத்துண்டை எடுத்து எல்லோரும் தங்களது உணவுகளில் பிளிந்து விட்டார்கள். அடுத்தபடியாக ஒருவர் எடுத்தார் சாறு வரவில்லை. உடனே ஒரு பயில்வான் வந்து அதை பிளிந்தார். அதிலும் ஒரு சொட்டுதான் வந்தது. சக்கையாகப் போய்விட்டது. ஒருவர் அதை எடுத்தார்.
அவர் பார்ப்பதற்க்கு நோஞ்சான் மாதிரி எலும்பும் தோலுமாக இருந்தார். இருந்தாலும் அவர் சக்கையை எடுத்துப் பிழிந்தார் நிறைய சாறு வந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம். கசக்கி பிழிவதில் இவ்வளவு கெட்டிக்காரராக இருக்கின்றாரே! இவர் யார்? என்று விசாரித்தார் அரசன். இவர் தான் நமது ஊர் மக்களிடம் வரிவசூல் பண்ணுபவர்! என்றார்கள்.