கையூட்டு – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Bribery – Today’s information – Thenkachi Ko. Swaminathan

ஒரு காலத்தில் பிரஷ்யா என்று ஒரு தேசம் இருந்தது.
ப்பொழுது ஜேர்மனி இருப்பது போல் இதன் பெரும்பகுதி ஒரு காலத்தில் “பிரஷ்யாங்” என்னும் பெயருடன் இருந்தது. அப்பொழுது அதற்கு அரசராக இருந்தவர் மகாபிரடரிக்! (ஃபிரெடரிக் தி கிரேட்) அந்த ராஜாவுக்கு ஒரு சந்தேகம்.

“நாம் பலவகையான வரிகளை விதித்து வசூல் செய்கிறோம். அப்படி செய்தும் வருமானம் குறைந்து கொண்டே போகுதே… இதற்கு என்ன காரணமாக இருக்கும்?” இதுதான் அவருக்கு ஏற்பட்ட சந்தேகம். ஒரு சமயம் அந்த அரசர் தம்முடைய அமைச்சர்களையும் பிரபுக்க ளையும் தளபதிகளையும் கூப்பிட்டு ஒரு விருந்து வைத்தார். விருந்து முடிந்ததும் அவர்களைப்பார்த்து இந்த சந்தேகத்தைக் கேட் டார்.

வரிகள் அதிகமாக விதித்தும் வருமானம் குறைவதற்கு என்ன காரணம்? என்று கேட்டார். பல பேருக்கு இதற்குச் சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை. அனுபவசாலியான ஒரு தளபதி எழுந்தார்.
அரசே! அது எப்படி என்பதை இப்பொழுது உங்களுக்கு காட்டு கின்றேன் என்றார். உடனே ஒரு பெரிய பனிக்கட்டி ஒன்றை தன்னுடைய கையிலே எடுத்தார். அதை அப்படியும் இப்படியும் திருப்பிப்பார்த்தார். அப்புறம் அதை அடுத்தவரிடம் கொடுத்தார். அவரும் அதை பார்த்து விட்டு அடுத்தப்படியாக இருந்தவரிடம் கொடுத்தார். இப்படியே இது ஒவ் வொருத்தர் கையாகமாறி கடைசியிலே மன்னர் கைக்குப் போய்ச் சேர்ந்தது.

மன்னர் கைக்கு அந்தப் பனிக்கட்டி போய்ச்சேர்ந்த பொழுது அது கொஞ்சமாக உருகி ஒரு பட்டாணி கடலை அளவுக்கு ஆகியது. மன்னர் யோசித்தார். வரி அதிகமாகப் போட்டாலும் வந்து சேருவது குறைவாக இருக்கிறது என்ன காரணம் என்பது அவருக்குப் புரிந்து போய்விட்டது. காலம்தான் மாறிக் கொண்டிருக்கிறதே தவிர இந்த கையூட்டு வாங்கும் பழக்கம் மாறினதாக இல்லை.
இன்னொரு ராஜா இருந்தார். அவர் தன்னுடைய ராஜாங்கத்திலே லஞ்ச ஊழலே இருக்கக் கூடாது என்று நினைத்தார். அவரிடம் பல்வேறு துறைகளுக்கும் பொறுப்பாக இருந்த பலபேரும் மிகவும் சுத்தமாகவும், நேர்மையாகவும் இருந்தார்கள்.ஒரே ஒருத்தர் மட்டும் எல்லோரிடமும் லஞ்சம் வாங்கிக்கொண்டே இருந்தார்.

அவரை வேறு துறைகளுக்கு மாற்றிப் பார்த்தார் அந்த ராஜா. எந்த வேலையைக் கொடுத்தாலும் அதிலும் லஞ்சம் வாங்குவதற்கு ஒரு வழியை உண்டு செய்து கொள்ளுவார் அந்த ஆள்.

ராஜாவுக்கு இது ஒரு பெரிய தலைவலியாகப் போய்விட்டது! இவரை என்ன செய்வது? இவருக்கு என்ன வேலையைக் கொடுப்பது? கொஞ்சம் கூட லஞ்சம் வாங்குவதற்கு சந்தர்ப்பமே இல்லாத ஒரு வேலையைக் கொடுக்க வேண்டும் என்று திட்டம் போட்டார். ஒரு நாள் அவருக்கு அந்த உத்தரவும் போட்டார். அதாவது அவருக்கு! என்ன வேலை என்றால் கடற்கரையில் தான் அவருக்கு வேலைத்தளம்.

அங்கேயே இருந்து கொள்ள வேண்டியது தினமும் எத்தனை கடல் அலை கரையிலே வந்து மோதுகின்றது என்பதை கணக்கெடுத்து ராஜாவுக்கு தெரிவிக்க வேண்டியது. இதுதான் அவருக்கு வேலை. பேசாமல் அலையை எண்ணிக் கொண்டு உட்கார்ந்திருக்கட்டும். அப்பொழுதாவது அவர் லஞ்சம் வாங்குவதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும் என்று நினைத்தார் ராஜா.

இந்த ஆள் கடற்கரைக்குப் போய் கடமையைத் தொடங்கினார்.
ஒரே மாதத்திலே அங்கே சொந்தமாக ஒரு பிரமாண்டமான மாளிகை கட்டினார். ராஜாவுக்கு இது பெரிய ஆச்சரியமாக போய்விட்டது! அலையை எண்ணும் வேலையில் அந்த ஆள் எப்படி பணம் சம்பாதித்தார் என்று விசாரித்துப் பார்த்தார். அக்கம் பக்கத்திலே!
அந்த ஆள் என்ன செய்திருக்கின்றார் என்றால் கடற்கரையில் போய் பொறுப்பேற்றவுடனே அங்கே இருந்த மீனவர்களிடம். “இந்த கரையிலே ஒரு நாளில் வந்து மோதும் அலைகள் எத்தனை?” என்று கேட்டிருக் கின்றார். “அது எப்படி தெரியும்?” என்றிருக்கின்றார்கள் அவர்கள்.

தினமும் அந்த எண்ணிக்கை தெரிய வேண்டும். எம் ராஜாவுக்கு தினமும் அறிக்கை அனுப்ப வேண்டும் தவறினால் நீங்கள் இந்த கடலிலே போய் மீன்பிடிப்பதற்கு ராஜாவின் அனுமதி கிடைக்காது!’ என்றிருக்கின்றார் இவர். மீனவர்கள் பயந்து போய் விட்டார்கள் ! கடலுக்குப் போக அனுமதி க்காவிட்டால் பட்டினி கிடக்க நேரிடும் மெதுவாக அந்த ஆளிடம் போனார்கள்! காதோட காதாக சொன்னார்கள். “ஐயா… எங்களால் கடல் அலையை எண்ண முடியாது தினமும் எங்களால் முடிந்ததை உங்களுக்கு பணமாகக் கொடுத்து விடுகின்றோம். நீங்கள் தான் ராஜாவிடம் சிபாரிசு செய்து நாங்கள் தொடர்ந்து மீன் பிடிப்பதற்கு அனுமதி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.

பணம் தினமும் வந்து சேர ஆரம்பித்தது. “பதவியிலே ஏனைய பதவியைவிட இந்தப் பதவி எவ்வளவோ மேல்!”என்று நினைத்து விட்டான் அந்த ஆள் அதுமட்டுமில்லை…. “தயவு செய்து என்னை இந்த இடத்தைவிட்டு மாற்றிவிடாதீர்கள்” என்று வேறு கேட்க ஆரம்பித்து விட்டான்.

Bribery – Today’s information – Thenkachi Ko. Swaminathan