பக்தியின் எல்லை  – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

The Limits of Devotion – Today's Information – Thenkachi Ko. Swaminathan

உனக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராகி இருக்கின்றேன் என்றார் ஒருவர். சரி வேறு ஒன்றும் வேண்டாம். ஒரு பத்து ரூபாய் பணம் இருந்தால் கைமாறாகக் கொடு. நாளைக்கு தருகின்றேன் என்றார் இன்னொருவர் அவ்வளவுதான். நான் அவசரமாக ஒருவரைப்பார்க்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு வந்து உன்னைப் பார்க்கின்றேன் என்று சொல்லிவிட்டு அந்த நபர் சென்று விட்டார்.

இதுதான் இன்றைக்கு உலக நிலவரம். ஆனால் ஒருவன்மேலே உண்மையாகவே அன்பு செலுத்துவது என்பது பெரிய விடயம். பக்தி செலுத்துவது என்பது அதைவிடப் பெரிய விடயம். பக்தி என்றால் ஏதோ கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்கி வருவது இல்லை. பக்தியின் எல்லை எது என்று தெரிவதற்கு உங்களுக்கு ஆசையா? அப்படி என்றால் இந்தக் கதையை கேளுங்கள். மயூரசர்மா என்று ஒருவன் இருந்தான். கிருஷ்ணர் மேல் அவன் மிகவும் பக்தியாக இருந்தான். ஒருநாள் கிருஷ்ணர் அவனைப் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தார். கிருஷ்ணரைப் பார்த்தவுடனே அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி.வழக்கமாக பக்தர்கள் தானே பகவானிடம் ஏதும் கேட்பார்கள். இங்கே பகவான் பக்தனைப் பார்த்து கேட்டார். இதோ பார் உன்னிடம் நான் ஒன்று கேட்பேன். கொடுப்பாயா என்றார். பக்தன் மாட்டேன் என்றா சொல்லுவார்.

நீங்கள் என்ன கேட்டாலும் அதைக் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்றான் மயூரசர்மன். உன்னுடைய மகன் ஒருவன் இருக்கின்றான் ஐந்து வயதில். அவன் தான் எனக்கு வேண்டும் என்றார். அவன் கொஞ்சம் கூடத் தயக்கம் இன்றி சரி தருகின்றேன் என்று சொல்லிவிட்டான். கிருஷ்ணர் பார்த்தார். அவன் உடல் முழுவதும் எனக்குத் தேவையில்லை. அவன் உடலின் வலது பக்கம் மட்டும் போதும் என்றார். அதற்கும் சரி அப்படியே கொடுக்கின்றேன் என்றார். அந்தச் சின்னப் பையனை நிற்க வைத்து அவன் தலையில் இருந்து ஒரு ரம்பத்தாள் அறுக்க வேண்டும். அப்பொழுது தான் இரண்டு பாகமாக ஆக்க முடியும் என்றார்.

சரி அப்படியே செய்யலாம் என்றான். அந்த ரம்பத்தை நீ ஒரு பக்கமும் உன் மனைவி ஒரு பக்கமும் பிடித்து அறுத்து அவனை இரண்டு துண்டாக்க வேண்டும் என்றார். அதற்கும் சரி என்றான். அப்படிச் செய்கின்ற போது நீ அழக்கூடாது உன் மனைவியும் அழக்கூடாது என்றார். சரி என்றான். உன் மகனும் அழக்கூடாது என்றார். அதற்கும் சரி என்று சம்மதித்தார். இவ்வளவு நிபந்தனைகளின் பெயரிலேதான் உன் மகனுடைய வலது பாகத்தை நான் ஏற்றுகொள்கிறேன். இல்லை என்றால் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சொல்லிவிட்டார் அவர். உங்களுடைய அத்தனை நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டு நாங்கள் நடக்கின்றோம் என்று சொல்லி விட்டான் மயூரசர்மன். உடனே மகனை அழைத்தான். அவன் வந்து நின்றான். அவனை குளிப்பாட்டினான்.

புது ஆடைகளை அணிவித்தான். அதன்பின் ஒரு ரம்பத்தை எடுத்து அறுக்க ஆரம்பித்தான். ஒரு பக்கம் அவன் இன்னொரு பக்கம் அவன் மனைவி. நடுவிலே அந்தப் பையன் அவர்கள் இரண்டு பேர் கண்களிலும் கண்ணீர் கொஞ்சம் கூட வரவேயில்லை. ஆனால் அந்தப் பையனின் இடது கண்ணில் இருந்து மட்டும் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. இதைக் கிருஷ்ணர் பார்த்துவிட்டார். என்னுடைய நிபந்தனைப்படி நீங்கள் நடந்துகொள்ளவில்லை. அதனால் உங்கள் பையடைய வலதுபாகம் எனக்கு வேண்டாம் என்றார்.

நாங்கள் இரண்டு பேரும் அழவில்லை என்றான் மயூரசர்மன். நீங்கள் அழவில்லை சரி ஆனால் உங்கள் பையனுடைய இடது கண் மட்டும் அழுகின்றதே என்றார். உடனே அந்தச் சின்னப் பையன் என்ன சொன்னான் தெரியுமா? என் உடலோடு வலது பாகத்தை மட்டும் தானே பகவான் கேட்டார். வலது பாகம் செய்த புண்ணியத்தை இடது பாகம் செய்யவில்லை. அப்படி என்று நினைத்து இடது கண் அழுது கொண்டு இருக்கின்றது என்றான். உடனே கிருஷ்ணர் கண்களிலே கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. அந்தப் பையனை அணைத்துக் கொண்டார். அவன் பழைய மாதிரி முழுவதுமாக ஆகிவிட்டான். இதுதான் பக்தியின் எல்லை என்று விளக்கம் கொடுத்தார் ஒரு ஆன்மீகப் பேச்சாளர். பக்தியின் எல்லையைப் புரிவதற்காக இந்தக் கதை நீங்கள் உடனே பகவான் இப்படி எல்லாம் வந்து நின்று பையனை வெட்டிக் கொடு என்று கேட்பாரா? என்று கற்பனை செய்துகொண்டு இருக்காதீர்கள். ஆன்மிக விடயங்களை ஆன்மிக நோக்கத்திலேயே புரிந்துகொள்ள வேண்டும் அதுதான் முக்கியம்.

பக்தியின் அளவைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் சொல்கின்றேன்.
நான் செய்யும் வியாபாரத்தில் இன்று எனக்கு ஆயிரம் ரூபாய் இலாபம் கிடைத்தது என்றால் அதில் 500 ரூபாயை உன் கோவிலுக்கு வந்து உண்டியலில் போடுகின்றேன் என்று வேண்டினார். வியாபாரம் செய்தார். 1000 ரூபாய் கிடைக்கவில்லை 500 ரூபாய் இலாபம் கிடைத்தது. அவர் அதன்பின் கோவிலுக்குச் செல்லவில்லை. எனக்குக் கிடைத்த 500 ரூபாவில் பாதியை உண்டியலில் போடுகிறேன் என்றுதானே சொன்னேன். அவர் என்னை முறைத்துப் பார்த்தார். விபரம் தெரியாமல் பேசாதீர்கள். கடவுள் ஏற்கனவே அவர் பங்கு 500 ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி 500 ரூபாவை எனக்கு கிடைக்கின்ற மாதிரி செய்துள்ளார். அதனால் இது எனக்கு சேர வேண்டிய பங்கு என்றார். இவரின் பக்தியுடைய எல்லை எந்த அளவில் இருக்கிறது பார்த்தீர்களா?

The Limits of Devotion – Today's Information – Thenkachi Ko. Swaminathan