நேர்முகத் தேர்வு – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Interview – Today’s information – Thenkachi Ko. Swaminathan

ஒரு அலுவலகத்தில் வேலைக்கு ஆள் தேவை. அதற்காக நேர்முகத்தெரிவு நடந்துகொண்டு இருந்தது. அது என்ன வேலை என்றால் கம்பியில்லா தந்திக் கருவிகள் இயக்கும் வேலை. நிறைய இளைஞர்கள் வாசலில் காத்து இருந்தார்கள். எல்லோரும் சும்மா உட்காந்திருக்காமல் பக்கத்தில் இருக்கிறவர்களிடம் எதை எதையோ பேசி அரட்டை அடித்துகொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

ஆனால் கடைசியில் உட்கார்ந்திருந்த இளைஞன் மட்டும் யாரிடமும் பேசாமல் அமைதியாக உட்காந்திருந்தான். தேர்வு அதிகாரிகள் இருந்த அறைக்குள்ளேயிருந்து தந்திக்கருவியின் சத்தம் மட்டும் லேசாகக் கேட்டுகொண்டு இருந்தது. அரட்டை அடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் அந்தச் சத்தத்தை கவனிக்கவில்லை. அவர்கள் ஊர் விபரங்களை தீவிரமாக பேசிகொண்டிருந்தார்கள்.

ஆனால் கடைசியில் உட்கார்ந்திருந்த அந்த இளைஞன் மட்டும் கம்பியில்லாத தந்திக்கருவியில் இருந்து வெளியான ஒலிக்குறிப்புகளைக் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தான். அதை கேட்டு முடித்ததும் அவன் மட்டும் தீடீர் என்று எழும்பி அதிகாரிகள் இருந்த அறைக்குள் நுழைந்தான். ஏன் இப்படி இவன் மட்டும் யாரும் கூப்பிடாமல் திடீர் என்று எழும்பி உள்ளே போகின்றார் என்று மற்றவர்களுக்கு விளங்கவில்லை.

உள்ளே போன இந்த இளைஞன் கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். அவன் வெளியே வரும் போது வேலைக்கான உத்தரவுக் கடிதம் அவன் கையிலே இருந்தது. அப்பாயின்ட்மென்ட் ஒடரை வாங்கிக்கொண்டு வந்தான். இதைப் பார்த்தவுடன் மற்ற இளைஞர்களுக்குக் கோபம் வந்துவிட்டது.

இது என்ன அநியாயம் நாங்கள் முதலில் வந்து நிறைய நேரமாக காத்துக்கொண்டு இருந்தோம். கடைசியாக வந்த நீ எங்களுக்கு முன்னால் எப்படி போகலாம்? வரிசைப்படி எங்களை சோதிக்காமல் தீடீர் என்று உனக்கு எப்படி உத்தரவுக் கடிதம் கொடுத்தார்கள்? என்று கூச்சல் போட ஆரம்பித்தார்கள். அதற்கு அந்தப் பையன் பதில் கூற ஆரம்பித்தான். உங்கள் அனைவரையும் சோதித்த பின்னர் தான் எனக்கு இந்த வேலையை கொடுத்தார்கள்.

அந்த அதிகாரிகள் அந்த அறைக்குள்ளே இருந்த கருவி மூலமாகத்தான் ஒலிக் குறிப்புக்களாலேயே செய்திகளை அனுப்பினார்கள் அதை நீங்கள் கவனிக்கவில்லை என்றான். என்ன செய்தி அனுப்பினார்கள்? என்று கேட்டார்கள் அரட்டையில் தகுந்த இளைஞர்கள்.

அதிகாரிகள் ஒலிக் குறிப்பு மூலம் அனுப்பிய செய்தி இதுதான் அதாவது எங்களுக்கு எந்த நேரமும் அக்கறையும் கவனமும் உள்ள இளைஞனே தேவை இந்த செய்தியைப் புரிந்துகொண்டு முதலில் உள்ளே வருகின்ற இளைஞனுக்கு வேலை உத்தரவுக் கடிதம் காத்திருக்கிறது. இதுதான் அந்தச் செய்தி அதை புரிந்து கொண்டுதான் நான் உள்ளே போனேன். வேலை கிடைத்துவிட்டது என்றான். அரட்டையில் கவனம் சிதறியதனாலே அவர்களினால் அழைப்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்தக் கதையை ஒரு ஆன்மீக பெரியவர் (ரஜனீஸ்) சொல்லியிருந்தார். அவர் என்ன சொல்கின்றார் என்றால். இறைவனும் இதே மாதிரியான அழைப்புக்களை சொல்லிகொண்டே இருக்கின்றார். இறைவனின் மொழி இயற்கையிலே உள்ளது. இயற்கையிலே குறிப்புக்கள் வடிவத்திலே இருக்கின்ற அழைப்புக்களை நாம் அமைதியாகவும் அக்கறையோடும் முயற்சி செய்தால் அதைப் புரிந்து கொள்ளலாம். கவனத்தைக் கண்டபடி சிதறவிடாமல் இருந்தால் இதை புரிந்துகொண்டு இறைவனை நெருங்கலாம் என்கின்றார் அந்தப் பெரியவர்.

இது இயற்கை நடத்தும் நேர்முகத் தேர்வு. எனக்கு தெரிந்த நேர்முகத் தேர்வு எல்லாம் வேறு மாதிரி அது எப்படி என்றால். புகையிரத நிலையத்தில் பொறுப்பதிகாரிக்கான நேர்முகத்தேர்வு நடந்தது கொண்டிருந்தது. ஒருவன் போய் அதிகாரிகளுக்கு எதிரே அமர்ந்தான். ஒரு அதிகாரி கேள்வி கேட்டார். ஒரே தண்டவாளத்தில் இரண்டு பக்கத்திலிருந்தும் எதிரும் புதிருமாக இரண்டு புகையிரதம் வந்து கொண்டு இருக்கின்றது. இன்னும் அரைமணி நேரத்திலே இரண்டும் மோதிக்கொள்ளும் இந்த சூழ்நிலையில் நீ என்ன செய்வாய்? என்று கேட்டார். அவன் சிறிது நேரம் யோசித்தபின் கூறினான். என் தம்பியைக் கூட்டி கொண்டு வருவேன் என்றான். ஏன் என்று கேட்டார் அதிகாரி. ஏனென்றால் அவன் ரயில் விபத்தை இதுவரை பார்த்ததில்லை என்றான்.

Interview – Today’s information – Thenkachi Ko. Swaminathan