ஒருவர் கூட நாம் சண்டை போடுகின்றோம் அதில் நாம் வெற்றி அடைவதாக வைத்துக்கொள்வோம். நம் மனதுக்கு சந்தோசமாகத்தான் இருக்கும். இருந்தாலும் உள் மனதில் ஒரு பயமும் உண்டாகலாம். தோற்றுபோனவர் சும்மா இருப்பாரா? அவர் மறுபடியும் எப்பொழுது சந்தர்ப்பம் வரும் என்று எதிர்பார்த்துகொண்டுதான் இருப்பார். அதனால் வெற்றியின் ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பயமாகதான் இருக்கும்.
ஒரு மன்னன் இருந்தான் அவன் நிறையப்பேரோடு சண்டைபோட்டான். ஜெயிச்சான் பல நாடுகளை வென்றான் அதனாலேயே அவன் மனதுக்குள் ஒரு பயம் உண்டாகிவிட்டது. பகை மன்னர்கள் அனைவரும் படை யெடுத்துவந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம். எல்லோரும் வந்து இப்பொழுது இருக்கின்ற இந்த மாளிகையை கைப்பற்றிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தான். நடுங்க ஆரம்பித்தான். ஏன் ஒரு மாதிரியாக இருக்கின்றீர்கள் என்று கேட்டார் அமைச்சர். இவன் விபரத்தைச் சொன்னான். இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டார்கள்
அதன் பிரகாரம் ஒரு மாளிகையை புதியதாக கட்டினார்கள்.
அதற்கு ஜன்னல் இல்லை உள்ளே போக வெளியே வர ஒரு கதவு மட்டும்தான் உண்டு. அதைத் தவிர அந்த மாளிகைக்கு வேறு எந்த வழியும் கிடையாது. ஒரு சின்னத் துவாரம் தெரிந்தால் கூட அதையும் சுத்தமாக அடைத்து விட்டார்கள். ஒரே ஒரு கதவு இருந்தது. அதைப் பாதுகாப்பதற்காக ஏராளமான வீரர்களை நிறுத்திவிட்டான். இவ்வளவும் செய்து முடித்த பின் தான் அந்த மன்னனுக்கு திருப்தியாக இருந்தது.
ஒரு நாள் அந்த ராஜாவும் அமைச்சரும் அந்த ஒரு கதவு வழியாக கீழே வந்தார்கள். என்ன அமைச்சரே நம் ஏற்பாடு எப்படி என்று சிரித்துக் கொண்டே கேட்டார் ராஜா. அபாரம் என்றார் அமைச்சர் அவர் வேறு என்ன சொல்வார். இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டதை அங்கே வீதி ஓரமாக உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் கேட்டார். சிரித்து விட்டார் . அவர் சிரித்ததைப் பார்த்ததும் அரசனுக்கு கோபம் வந்துவிட்டது. ஏன் சிரிக்கின்றீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர் மிகவும் புத்திசாலித்தனமாகத்தான் இந்த மாளிகையைக் கட்டியிருக்கின்றீர்கள் மிகவும் பாதுகாப்பாகத்தான் உள்ளது இருந்தாலும் ஒரு குறை தெரிகின்றது என்றார். என்னவென்று கேட்டார் அரசன் . அதுக்கு அந்த பெரியவர் வேறு வழியே வைக்காமல் கட்டிய நீங்கள் எதற்காக ஒருவழியை மட்டும் வைத்தீர்கள். அந்த வழியால் எதிரிகள் நுழைந்தால் என்ன செய்வீர்கள் என்றார். அதற்கு என்ன செய்வது என்றார் அரசன். அதையும் ஒரு கருங்கல் சுவர் எழுப்பி அடைத்துவிடுங்கள் அதுதான் நல்லது அதன் பின் எதிரிகள் பயம் சிறிது கூட இல்லாமல் நீங்கள் உள்ளே அமர்ந்து இருக்கலாம் அதுதான் மிகக் கவனம் என்றார் .
மன்னன் யோசித்தான். ஒரு யோசனை தோன்றியது .அது சரி நீங்கள் சொல்வது போல் அந்த ஒரு வழியையும் அடைத்துவிட்டால் இந்த மாளிகை ஒரு கல்லறை போல் ஆகிவிடுமே என்றார். இப்பொழுது மட்டும் எவ்வாறு உள்ளது கல்லறை போலேதானே இருக்கின்றது என்றார். எதிரி வந்து உங்களை சாகடிக்காமல் விட்டாலும் நீங்கள் ஒருநாள் சாகத்தானே போகின்றீர்கள் என்றார். அதன் பின் சிறுவிளக்கம் கொடுத்தார். உங்கள் மாளிகையில் எவ்வளவு ஜன்னல்களும் கதவுகளும் இருக்கின்றதோ அந்த அளவுக்கு வெளி உலகத்தோடு உங்களுக்கு தொடர்பு உள்ளது. அந்த அளவுக்கு உங்கள் வாழ்க்கையில் ஓர் இயக்கம் இருக்கின்றது. கதவுகளை மூட மூட வாழ்க்கை யும் அடைப்பட்டு போகின்றது.
நான் கூட ஒருகாலத்தில் மாளிகையில்தான் இருந்தேன் அதனுடைய சுவர்களை எவ்வளவுதான் தள்ளிப்போட்டாலும் என் வாழ்க்கைக்கு அவைகள் எல்லைக் கோடுகளாக இருப்பதை உணர்ந்தேன். வாழ்க்கைக்கு எல்லையே இருக்கக்கூடாது என்று நினைத்தேன் இப்படி வந்துவிட்டேன். இப்பொழுது என் வாழ்க்கைக்கு வானம்தான் கூரை இந்த நிலம்தான் என் மாளிகை. இப்பொழுதுதான் வாழ்க்கையை என்னால் முழுமையாக உணரமுடிகின்றது என்றார் . அரசன் வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டார். தன்னுடைய மாளிகைக்கு நிறைய ஜன்னல்களையும் கதவு களையும் வைக்க உத்தரவு போட்டார் அரசன். ஒரு சுடுகாட்டிலே ஒரு கல்லறைக்கு மேலே கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான் ஒருவன். அந்த வழியே சென்ற இன்னொருவன் அவனைப் பார்த்து கேட்டார். ஏன் இப்படி பேய் பிசாசு நடமாடும் இந்த மாயானத்துக்கு வந்து கல்லறைக்கு மேலே உட்கார்ந்து இருக்கின்றீர் என்றார். எவ்வளவு காலம்தான் உள்ளேயே இருப்பது ஒரே புழுக்கமாக இருந்தது அதுதான் காற்று வாங்க வந்தேன் என்றார் அவர்.
