ஒருவன் எப்படி நடந்து கொள்கின்றான் என்பதை வைத்துத் தான் அந்த ஆள் எப்படி என்பதை நாம் முடிவு செய்கின்றோம். ஆளுமை என்று சொல்கின்றோம் அல்லவா? அதற்கு சூழ்நிலைகளை ஆளுகின்ற தன்மை என்று விளக்கம் கொடுக்கின்றார் ஒரு உளவியல் நிபுணர்.
சரி ஒரு மனிதனுடைய ஆளுமையை உருவாக்குகின்ற விடயங்கள் என்ன என்ன? பிறப்பு, வளர்க்கப்படுகின்ற விதம், படிப்பு, நண்பர்கள் சமுதாயம் இப்படி நிறைய உண்டு.ஆளுமையின் அடிப்படையில் சில மனநோய்கள் உண்டாகின்றது.அதெல்லாம் என்ன என்பதை தெரிந்து வைத்துக்கொண்டோம் என்றால் நம்முடன் இருப்பவர்களை அடையாளம் கண்டுபிடிக்க அது ரொம்ப உபயோகமாக இருக்கும்.
பரனாய்டு ஆளுமை என்று ஒன்று. இந்த கோளாறு உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? அதிக உணர்ச்சி, சந்தேகம், பொறாமை, அதிகமாக இருக்கும். வளைந்து கொடுக்க மாட்டார்கள். அடுத்தவர்களோடு இணக்கமான உறவு இருக்காது. அவர்கள் செய்யும் தப்பெல்லாம் அடுத்தவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருப்பார்கள் இது ஒரு ரகம்.
அடுத்தது ஸ்கிசாய்டு ஆளுமை. இந்தக் கோளாறு உடையவர்கள் அடுத்தவர்களுடன் பழகக் கூச்சப்படுவார்கள். சின்ன வயதிலேயே இது ஆரம்பமாகிவிட்டது. பகலில் கனவிலே சஞ்சரிப்பார்கள். அவர்களுடைய விரோதம் கோபம் இதைக் கூட வெளியே காட்டிக்கொள்ள முடியாமலே இருப்பார்கள். இவர்களுக்கு அகமுகம்! பிரச்சினைகளிலே இருந்து ஒதுங்கிவிட எதிலேயும் ஈடுபாடு இல்லாதவர்களாக இருப்பார்கள். இப்படி ஒரு ரகம்!
அடுத்தது சைக்லோ தைமிக் ஆளுமை.உணர்ச்சிகளிலே ஏற்றத் தாழ்வு அதிகமாக இருக்கும். ஒரு சமயம் பார்த்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சில சமயம் சோகமாக உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் மனநிலைக்குத் தகுந்த மாதிரி சமூக நிகழ்ச்சிகளிலே பங்கெடுத்துக் கொள்வார்கள். இன்னொரு வகை எண்ணப்பீடிகை ஆளுமை. இவர்களுக்கு எல்லாம் கரக்ட் ஆக இருக்க வேண்டும்! சட்டதிட்டம் எதிலேயும் ஒரு ஒழுங்கு முறை. இப்படி எதிர்பார்க்கின்ற மனோபாவம்? இவர்கள் எதிர்பார்ப்பிற்கு வன்முறைக்கும் மற்றவர்கள் கட்டுப்படவேண்டும் என்று நினைப்பார்கள்.
இந்த நிலைமை நீடித்தால் என்ன ஆகும் தெரியுமா? அலைக்கழிக்கின்ற எண்ணங்கள் திரும்பத்திரும்ப ஒரே செயலை செய்யத் தூண்டுகின்ற மனத்தளர்ச்சிக்கு ஆளாகிவிடுவார்கள்.
அடுத்தது ஹிஸ்டீரியா ஆளுமை. சின்னச் சின்ன விடயத்திற்கெல்லாம் பெரிதுப்படுத்தி நாடகமாக்குகின்ற நடிகர்கள் இவர்கள். உணர்ச்சி அதிகம் உள்ளவர்கள். இவர்கள் மன எழுச்சியிலே பக்குவமின்மை-குழந்தைத்தனம்- முதிர்ச்சியின்மை எல்லாம் இருக்கும். தன்னலம்மிக்க குணம். பிறர் தன்னை மட்டுமே கவனிக்க வேண்டும் என்று நினைத்து செயற்படுவார்கள்.
அடுத்த ரகம் வளர்ச்சியற்ற ஆளுமை அடுத்தவர்களே இணங்கிப் போக முடியாதவர்கள். அறிவு, மனவெழுச்சி, சமூக உறவு இதுலேயெல்லாம் போதுமான வளர்ச்சியையும், நிறைவையும் பெற முடியாதவர்கள். இவர்களாலே வாழ்க்கையிலே முன்னேற முடியாது. பிச்சைக்காரர்கள்.. குற்றவாளிகள்.. இவர்களிடம் எல்லாம் இது மாதிரியான ஆளுமை அதிகமாக இருக்கும்.
அடுத்தது சோர்வுடைய ஆளுமை எதிலும் உற்சாகம் இல்லாமல் சோர்ந்து போய் இருப்பார்கள். அதுக் கெல்லாம் நமக்கு வலிமை இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். சின்ன விடயங்களுக்கு எல்லாம் அதிர்ச்சி அடைவார்கள். வாழ்வின் சுவையை அனுபவிக்க முடியாதவர்கள்.இன்னொரு ரகம் கொதித்தெழும் ஆளுமை எதுக்கெடுத்தாலும் ஆத்திரம், குரோதம், வன்செயல் இதில் எல்லாம் ஈடுபாடு இப்படி உள்ளவர்கள்.
அடுத்து நத்தை வகை ஆளுமை என்று ஒன்று!
அடுத்தவர்கள் மேலே விரோதம் இருக்கும் அடிக்கணும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் அதை அப்படியே வெளியே காட்டாமல் அதே சமயம் அமைதியான முறையிலே வெறுப்பை வெளிக்காட்டுகின்ற ரகம். இவங்கள் எல்லாம் பேசாமல் கம்முன்னு இருந்து கொண்டு நினைத்ததை நிறைவேற்றுபவர்கள். முன் ஜாக்கிரதை ஆளுமை-ஒரு ரகம்.
பாதுகாப்பின்மை-சந்தேகம்-முழுமையின்மை-அரைவேக் காட்டுத் தனம் இந்த மனபோக்கு அதிகம் இருப்பதனாலே அகம்பாவம், பிடிவாதம், எச்சரிக்கை எல்லாம் அளவுக்கு மீறி இருக்கும்.
இதுவரைக்கும் நாம் பேசிக்கெண்டிருந்த ஆளுமைப் பண்புகள் அளவுக்கு அதிகமாகப் போய்விட்டது என்றால் ஆளுமைக் கோளாறுகள் ஏற்படும். அதன் அடிப்படையிலே மனவியாதிகள் வரும்.
அதனாலே இணக்கமான எல்லோரும் விரும்பும் இயல்பான ஆளுமையைப் பெற நாம் முயற்சி செய்ய வேண்டும். ஒருத்தர் ஒரு மனோதத்துவ வைத்தியரைத் தேடி வந்தார்.டாக்டர் எனக்கு மனதில் ஏதோ வியாதி. ஆளுமைக் கோளாறு. அதாவது எனக்கு சீக்கிரமாக செத்து போனாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது என்றார். உடனே அந்த வைத்தியர் சரி அப்படி என்றால் அங்கேயே இருங்கள். நான்| வைத்தியம் பார்க்கிறேன் என்றார்.
