ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தார். கொடுங்கோல் ஆட்சி ராஜா. நிறைய தொந்தரவு செய்துகொண்டிருந்தார். அவர் ஒரு தடவை என்ன செய்தார் தெரியுமா? ஒரு தவறும் செய்யாத ஒரு இளைஞனைப் பிடித்து சிறையில் அடைத்துவிட்டார். அந்தப் பையனுடைய உறவினர்கள் எல்லோரும் ராஜாவிடம் சென்றார்கள்.
“அவன் ஒரு தவறும் செய்யவில்லை அவனை விடுதலை செய்யுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டார்கள். ராஜா யோசனை செய்தார். அந்த இளைஞனை கூப்பிட்டு வரச்சொன்னார். அவனைக் கொண்டு வந்து ராஜா முன்னால் நிறுத்தினார்கள். “இதோ பாருப்பா! உன்னை நான் விடுதலை செய்கிறேன். ஆனா ஒரு நிபந்தனை! அந்த நிபந்தனையை நீ நிறைவேற்றினால் உனக்கு விடுதலை!” அப்படி என்றார் ராஜா. “சரி!” என்று ஒத்துக்கொண்டான் பையன்.ராஜா நிபந்தனை என்ன என்பதைச் சொன்னார்.
“உன்னிடம் ஒரு செம்மறி ஆட்டைக் கொடுக்கப்போகிறேன். ஒரு மாதத்திற்கு அதற்குத் தேவையான தீனியையும் கொடுக்கப் போகிறேன். ஒரு மாதம் கழித்து அந்த ஆட்டை எடைப்போட்டு பார்ப்பேன்! அந்த ஆட்டின் எடை கொஞ்சம் கூட கூடியிருக் கக்கூடாது! எடை கூடியிருந்தால் உனக்கு விடுதலை கிடையாது! என்ன சொல்கிறாய் என்றார் ராஜா.
பையனுக்கு ஒன்றும் புரியவில்லை! பயமாகிப் போனது! குழம்பிக் கொண்டே நின்றுகொண்டிருந்தான். “சரி! ஒரு நாள் “நேரம்” தருகிறேன். நன்றாக யோசித்து நாளைக்கு உன் முடிவைச் சொல்லு!” என்றார் ராஜா. பையன் கவலையோடு வெளியே வந்தான். அங்கே ஒரு பெரியவர் நின்றுகொண்டிருந்தார் அவரிடம் இந்த விடயத்தைச் சொன்னான்.
ஒரு வழி சொல்லிக் கொடுத்தார் அந்தப் பெரியவர்.
அதைக் கேட்டதும் பையன் மறுபடியும் ராஜா முன்னாடி வந்து நின்றான் “உங்கள் நிபந்தனையை ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொன்னான். தீவனத்தையும் கொடுக்கும் படியாக உத்தரவு போட்டார் ராஜா. ஆட்டுக்குட்டியையும் ஒரு மாதத்திற்கு அதுக்கு வேண்டிய தீவனத்தையும் ராஜா கொடுத்தார்.
ஒரு மாதம் தினமும் தவறாமல் அந்தத் தீவனத்தை ஆட்டுக்குப் போட்டான். ஒரு மாதம் கழித்து அந்த ஆட்டை அரண்மனைக்கு கூட்டிக்கொண்டு வந்தான். ராஜா அதை எடை போட்டுப் பார்த்தார். எடை கூடவில்லை. அப்படியேதான் இருந்தது! உடனே போட்ட நிபந்தனைப்படி அந்த இளைஞனை விடுதலை செய்தார்.
சரி… ஆட்டுக்கு எடை கூடாமல் இருக்க அந்தப் பெரியவர் சொல்லிக்கொடுத்த யோசனை அது வேறு ஒன்றும் இல்லை. அந்த ஆட்டுக்கு எதிரிலே, அது கண்ணில் படும்படி ஒரு ஓநாயைக்கட்டிப் போடச்சொன்னார். அவ்வளவு தான்! ஆட்டுக்கு ஓநாய் பிறவிப்பகை!
ஒநாயைப் பார்த்தால் ஆடு நடுங்க ஆரம்பித்துவிடும். அவ்வளவு பயம்!
தினமும் அந்த ஆடு பயந்துகொண்டே தீனியை உண்டது. எடை கூடவே இல்லை! அதுதான் ரகசியம்! இது சின்னப்பிள்ளைங்களுக்கான ஒரு கதை. இதிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால் நாம் எல்லோரும் சாப்பிடும் போது மனதும் உடலும் அமைதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது உடம்பில் ஒட்டும்! அவசரத்திலும் பயத்திலும் சாப்பிட்டால் அது சரியாக ஜீரணமாகாது!
இன்னொரு ராஜா இருந்தார். அவரும் ஒரு இளைஞனை சிறையிலே அடைத்து விட்டார். விடுதலை செய்ய வேண்டும் என்றால் ஒரு நிபந்தனை என்றார். என்ன என்று கேட்டான். ஒரு ஆட்டுக்குட்டியை உன் முன்னாடி கொண்டு வந்து நிறுத்துவேன். நீ அதனிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அது, அதற்குச் சரியான பதிலை சொல்ல வேண்டும்! அப்படி செய்தால் உனக்கு விடுதலை!” என்றார்
இளைஞன் யோசித்தான் சரி என்று ஒத்துக்கொண்டான். அதன் பிரகாரமே ஆட்டுக்குட்டியைப் பதில் சொல்ல வைத்துவிட்டான். என்ன நடந்தது தெரியுமா? ஆட்டுக்குட்டியை கொண்டு வந்து நிறுத்தினார்கள். இவன் மெதுவாக அதனிடம் போனான். அதன் காதுக்கு பக்கத்தில் போய் “ஏப்ரலுக்கு அடுத்தது என்ன மாசம்?” என்று கேட்டான். அது உடனே “மே..!” என்று கத்தியது! இவன் விடுதலையாகி விட்டான்.
